

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-7
..
ஆதிபர்வம்
..
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு!
..
பீஷ்மர் சொன்னார், "ஓ தாயே, பாரத அரசமரபின் தொடர்ச்சிக்கான வழிமுறை குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.
ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை அழைத்து, அவருக்குச் செல்வத்தைக் காணிக்கையாகக் கொடுத்து, விசித்திரவீரியனின் மனைவியரிடத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடம்} வாரிசுகளை உண்டாக்கலாம்" என்றார்.
"சத்தியவதி மெல்லப் புன்னகைத்து, துக்கத்தால் உடைந்த குரலுடன் பீஷ்மரிடம்,
நீ சொல்வது உண்மைதான். உன் மீதிருக்கும் நம்பிக்கையில், நமது குலம் விருத்தியடையும் ஒரு வழியைச் சொல்கிறேன்.
துன்ப காலங்களில் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை நீ நன்கறிந்திருப்பதனால் அதை உன்னால் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். நமது குலத்தில் நீயே அறம் நிறைந்தவன், நீயே உண்மை நிறைந்தவன், நீயே எங்கள் ஒரே புகலிடம்.
எனவே, நான் உண்மையில் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டு, எது முறையோ அதைச் செய்வாயாக. எனது தந்தை {வளர்ப்புத் தந்தை-மீனவர்} ஓர் அறம்சார்ந்த மனிதராவார். அறத்திற்காகவே அவர் ஒரு படகை வைத்திருந்தார்.
ஒரு நாள், எனது இளமையின் தொடக்கத்தில், நான் அந்தப் படகில் துடுப்புப் போடச் சென்றிருந்தேன். அப்போது, அறம் சார்ந்தவர்களில் முதன்மையானவரும், பெரும் ஞானமுள்ளவருமான முனிவர் பராசரர், யமுனையைக் கடக்க எனது படகில் ஏறினார்.
நான் நதியின் மீது துடுப்புப் போடும்போது, அந்த முனிவர் {பராசரர்} ஆசையால் தூண்டப்பட்டு என்னிடம் மென்மையான வார்த்தைகளில் பேசினார்.
எனது தந்தையைக் குறித்த பயமே எனது மனத்தில் பெரிதாக இருந்தது. ஆனால் முனிவரின் சாபத்தைக் குறித்த பயமே இறுதியாக வென்றது. அவரிடம் ஒரு புனிதமான வரத்தையும் நான் பெற்றதால், என்னால் அவருடைய வேண்டுதலை மறுக்க முடியவில்லை.
பெரும் சக்தி வாய்ந்த அந்த முனிவர் முதலில் அந்த இடத்தை அடர்த்தியான மூடுபனியால் மறைத்து, அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் என்னைக் கொண்டு வந்து, தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.
அதற்கு முன்பு என் உடலில், முகம்சுழிக்க வைக்கும் மீன் நாற்றம் இருக்கும். ஆனால் அந்த முனிவர் அந்த நாற்றத்தை அகற்றி இப்போது என்னிடம் இருக்கும் நறுமணத்தைத் தந்தார்.
அந்த முனிவர் {பராசரர்} என்னிடம், அந்த யமுனை நதியின் தீவில் அவரது குழந்தையை {வியாசரை} ஈன்றெடுத்தாலும், நான் கன்னித் தன்மையைத் தொடர்வேன் என்றும் சொன்னார்.
என்னுடைய பருவ காலத்தில் என்னிடம் பிறந்த பராசரரின் குழந்தை, பெரும் சக்திகளையுடைய பெரிய முனிவனாகி, துவைபாயனன் (தீவில் பிறந்தவர்) {வியாசர்} என்று பெயரில் அழைக்கப்பட்டான்.
அந்தச் சிறப்பு மிக்க முனிவன், வேதங்களை நான்காகப் பிரித்து இந்த உலகத்தில் வியாசன் (பிரிப்பவர் அல்லது ஒழுங்குசெய்பவர்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவனது கரிய நிறத்திற்காகக் கிருஷ்ணன் (கருப்பன்) என்றும் அழைக்கப்பட்டான்.
பேச்சில் உண்மையுடன், ஆசைகளைத் துறந்த அந்தப் பெரும் துறவி, தனது பாவங்களை எரித்து, அவன் பிறந்தவுடனேயே தனது தந்தையுடன் {பராசரருடன்} சென்றுவிட்டான்.
உன்னாலும் என்னாலும் இப்பணிக்கு அவன் நியமிக்கப்பட்டால் அந்த ஒப்புயர்வற்ற பிரகாசமுள்ளவன், உனது தம்பியின் மனைவியரிடம் {அம்பிகை, அம்பாலிகையிடம்} நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுப்பான்.
அவன் செல்லும்போது என்னிடம், "தாயே, நீ சிரமப்படும்போது என்னை நினைத்துக் கொள்வாயாக" என்று சொல்லிச் சென்றான். ஓ பெருங்கரமுடைய பீஷ்மா, நீ விரும்பினால், அந்தப் பெரும் துறவியை நான் இப்போது அழைப்பேன்.
என்றாள்.
அந்தப் பெருமுனிவரைப் பற்றிய குறிப்பைச் சொல்லும்போதே பீஷ்மர் தனது கரத்தைக் குவித்துக் கொண்டு, "அந்த மனிதர் {வியாசர்} அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் நீதிகளில் தனது பார்வையைச் செலுத்தும் ஞானியாவார். அவர் பொறுமையாக இருந்து, அறம் எதிர்கால அறத்திற்கும், பொருள் எதிர்காலப் பொருளுக்கும், இன்பம் எதிர்கால இன்பத்திற்கும் இட்டுச்செல்லும் வகையில் நடந்து கொள்பவராவார்.
எனவே, உன்னால் சொல்லப்படும் காரியம் நமக்கும் நன்மையைத் தந்து, அறத்திற்கும் உட்பட்டே இருக்கும். இஃது ஒரு சிறந்த ஆலோசனை. இதில் எனக்கு முழு ஏற்பும் உண்டு" என்றார்.
இப்படிப் பீஷ்மர் சொன்னதும், சத்தியவதி துவைபாயன {வியாச} முனிவரை மனத்தால் நினைத்தாள்.
வியாசர், வேதங்களை விவரித்துக் கொண்டிருக்கும்போது தனது தாயின் அழைப்பை உணர்ந்து, யாரும் அறியா வண்ணம் அவளிடம் வந்தார்.
சத்தியவதி தன் மகனை வாரியணைத்து வரவேற்றுத் தனது கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினாள்.
தன் மகனின் {வியாசரின்} முன்னிலையில் அந்த மீனவ மகள் நீண்ட நேரம் பெரிதும் அழுதாள்.
அவளின் முதல் மகனான பெரும் வியாசர், அவள் அழுவதைக் கண்டு, குளிர்ந்த நீரால் அவளது முகத்தைக் கழுவினார். பிறகு அவளிடம் பணிந்து,
"ஓ தாயே, உனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் வந்துள்ளேன். எனவே, ஓ அறம்சார்ந்தவளே கால விரயமின்றி எனக்குக் கட்டளையிடுவாயாக. நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்" என்றார்.
பிறகு, பாரதர்களின் குடும்பப் புரோகிதர் வந்து வியாசரை வழிபட்டார். வியாசர் அந்த வழிபாட்டுகளை ஏற்றுச் சில வழக்கமான மந்திரங்களை உச்சரித்தார்.தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்து, அவர் தமது ஆசனத்தில் அமர்ந்தார். சத்தியவதி வியாசர் வசதியாக அமர்ந்ததை உறுதி செய்து கொண்டு, சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து,
அவரிடம், "ஓ கல்விமானே, மகன்கள் தங்கள் பிறப்பை தந்தை மூலமாகவும் தாய் மூலமாகவும் அடைகின்றனர்.
எனவே, அவர்கள் இரு பெற்றோருக்கும் (தந்தை - தாய்) பொதுவான சொத்தாகும். தந்தைக்கு இருக்கும் அதே உரிமை தாய்க்கும் இருக்கிறது என்பதில் யாரும் சிறு சந்தேகமும் இருக்காது.
ஓ பிரம்மமுனியே, நிச்சயமாக, விதிப்படி நீயே எனது மூத்த மகனானது போல், விசித்திரவீரியன் எனது இளைய மகன் ஆவான். பீஷ்மன் எப்படித் தந்தைவழியில் விசித்திரவீரியனின் சகோதரனோ அப்படியே நீயும் தாய்வழியில் சகோதரன். நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனால், மகனே இதைத் தான் நான் நினைக்கிறேன். சந்தனுவின் மகன் பீஷ்மன் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதால், அந்த உண்மைக்காகவே, நாட்டை ஆள்வதற்குப் பிள்ளையைப் பெற விரும்பவில்லை.
எனவே, ஓ பாவங்களற்றவனே, உனது தம்பி விசித்திரவீரியனிடம் இருக்கும் பாசத்திற்காகவும், நமது அரசகுலத்தின் பரம்பரை தொடர்ச்சிக்காகவும், பீஷமனின் வேண்டுகோளுக்காகவும் எனது கட்டளையின் பேரிலும், எல்லா உயிர்க்கும் அன்புகூர, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்க, உனது இதயத்தின் சுதந்திரத்துடன், நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். உனது இளைய சகோதரனின் {விசித்திரவீரியனிடம்} இரு விதவைகள் {அம்பிகை, அம்பாலிகை} இளமையுடனும் பெரும் அழகுடனும் தேவர்களின் மகளைப் போல உள்ளனர்.
அறத்திற்காகவும், தர்மத்திற்காகவும், வாரிசு பெற அவர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். அந்தக் காரியத்திற்கு நியமிக்கப்பட நீயே தகுதிவாய்ந்தவன். எனவே, அவர்களிடம் நமது குலம் தழைக்கவும், நமது பரம்பரையின் தொடர்ச்சிக்காவும் பிள்ளைகளைப் பெறு" என்றாள் சத்தியவதி
இதைக் கேட்ட வியாசர், "ஓ சத்தியவதி, இவ்வாழ்விலும், மறுவாழ்விலும் உள்ள அறத்தின் தன்மைகளை நீ அறிவாய். ஓ பெரும் ஞானம் கொண்டவளே, உனது அன்பும் அறத்திலேயே நிலைத்திருக்கிறது.
எனவே, உனது கட்டளையின் பேரில், அறத்தை எனது நோக்கமாகக் கொண்டு, நீ விரும்பியதை நான் செய்வேன்.
நிச்சயமாக இந்தச் செயல் நான் அறிந்த உண்மையான மேலுலகத் தர்மத்திற்குக் கட்டுப்பட்டதே, நான் எனது தம்பிக்கு மித்ரனையும் வருணனையும் போன்ற மகன்களைக் கொடுப்பேன். அந்த மங்கையர் ஒரு முழு வருடத்திற்கு நான் சொல்லும் நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அவர்கள் தூய்மையடைவார்கள். கடும் தவம் செய்யாமல் என்னிடம் எந்தப் பெண்மணியாலும் நெருங்க முடியாது" என்றார்.
பிறகு சத்தியவதி, "ஓ பாவங்களற்றவனே, நீ சொல்வதுபோலத் தான் இருக்க வேண்டும். ஆனால், அந்த மங்கையர் உடனே கருவுறும்படி ஏதாவது செய்வாயாக. மன்னன் இல்லாத நாட்டில் மக்கள் பாதுகாப்பின்றி அழிந்து போவர். வேள்விகளும் புனிதமான காரியங்களும் தடைப்படும். மேகங்கள் மழையைப் பொழியாது. தேவர்கள் மறைந்து போவர்.
மன்னன் இல்லாத நாட்டை எப்படிப் பாதுகாக்க முடியும்? எனவே, அந்த மங்கையர் கருவுற நடவடிக்கை எடுப்பாயாக. அந்தப் பிள்ளைகள் தங்கள் தாயின் கருவறையில் இருக்கும்வரை பீஷ்மன் அவர்களைக் கவனித்துக் கொள்வான்" என்று சொன்னாள்.
வியாசர், "அகாலத்தில் எனது தம்பிக்கு பிள்ளைகளை நான் கொடுக்க வேண்டும் என்றால், அந்த மங்கையர் எனது கோரத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்கள் கடினமான நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.
கோசல நாட்டு இளவரசியால் எனது கடும் நாற்றத்தையும், கொடும் தோற்றத்தையும், கோரமுகத்தையும், எனது ஆடையையும், எனது உடலையும் தாங்கிக் கொள்ள முடியுமென்றால், அவள் அருமையான பிள்ளையைச் சுமப்பாள்" என்று பதிலுரைத்தார்.
"சத்தியவதியிடம் இப்படிச் சொன்ன பிறகு, பெரும் சக்தி வாய்ந்த வியாசர் அவளிடம், "கோசலத்தின் இளவரசி சுத்தமான ஆடைகளும், ஆபரணங்களும் பூண்டு அவளது படுக்கையறையில் எனக்காகக் காத்திருக்கட்டும்" என்றார். இதைச் சொல்லிவிட்டு அந்த முனிவர் மறைந்து போனார்.
சத்தியவதி தனது மருமகளைத் தனிமையில் சந்தித்து, நன்மை பயக்கத்தக்க அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினாள், "ஓ கோசல இளவரசி, நான் சொல்வதைக் கேட்பாயாக. இஃது அறத்திற்குக் கட்டுப்பட்டது.
எனது கேடுகாலத்தால், பாரதர்களின் பரம்பரை அழியப்போகிறது. எனது துயரத்தையும், தனது தந்தையின் குலத்தொடர்ச்சி அழிவதையும் கண்ட பீஷ்மன், நமது குலம் தழைக்க விரும்பி, ஓர் ஆலோசனையை என்னிடம் கூறியிருக்கிறான். இருப்பினும் அந்த ஆலோசனை நிறைவேறுவது உன்னிடமே இருக்கிறது. ஓ மகளே, அதை நிறைவேற்றி, பாரதர்களின் இழந்த பரம்பரையை மீட்டுக் கொடுப்பாயாக.
ஓ அழகான இடையைக் கொண்டவளே, இந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் ஒரு பிள்ளையை ஈன்றெடுப்பாயாக. அவன் நமது பரம்பரை வழி வந்த இந்த நாட்டின் சுமையைத் தாங்கிக் கொள்வான்." என்றாள்.
சத்தியவதி தான் பேச நினைத்ததைத் தனது அறம் சார்ந்த மருமகளிடம், அறத்திற்குக் கட்டுப்பட்டுத் தனது கோரிக்கையைச் சொல்வதில் பெரும் சிரமத்திற்கிடையில் வெற்றி கண்டாள். அந்தக் கடைசி நேரத்தில் வந்திருந்த பிராமணர்களுக்கும், முனிவர்களுக்கும், கணக்கிலடங்கா விருந்தினர்களுக்கும் உணவளித்தாள்"
சத்தியவதி தனது மருமகளை {அம்பிகையை} நீராட்டிச் சுத்தப்படுத்தி, படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த ஆடம்பரக் கட்டிலில் தனது மருமகளை அமரச் செய்து, அவளிடம் "ஓ கோசல இளவரசியே உனது கணவனின் {விசித்திரவீரியனின்} அண்ணன் இன்று உனது கருவறைக்குள் உனது குழந்தையாக நுழைவான். இன்றிரவு அவனுக்காகத் {வியாசருக்காக} தூங்காமல் காத்திருப்பாயாக" என்றாள்.
தனது மாமியாரின் {சத்தியவதியின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த இனிமையான இளவரசி அம்பிகை, பீஷ்மரையும், குரு குலத்தின் பிற மூத்தவர்களையும் நினைத்து அந்தக் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.
அந்த உண்மை நிறைந்த அம்முனிவர் (வியாசர்), தான் அம்பிகையைக் குறித்த ஒரு வாக்கை முதலில் கொடுத்திருந்ததால், அவளது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போதே நுழைந்தார்.
அந்த இளவரசி வியாசரது கரிய நிறத்தையும், தாமிரக்கம்பிகள் போலச் சிவந்திருந்த சடா முடியையும், எரியும் தழல் போன்ற கண்களையும், கரடு முரடான தாடியையும் பார்த்துப் பயந்து தனது கண்களை மூடிக் கொண்டாள்
எனினும், அந்த முனிவர் , தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் விருப்பத்தால் அந்த இளவரசியை அறிந்தார். அச்சத்திலிருந்த அம்பிகை, கண்ணைத் திறந்து ஒரு முறையேனும் வியாசரைப் பார்க்கவில்லை.
வியாசர் வெளியே வந்த போது, அவரது தாய் சத்தியவதி அவரைச் சந்தித்து, "அம்பிகை பிள்ளையைப் பெறுவாளா?" என்று கேட்டாள்.
அதைக்கேட்டு, "இளவரசி {அம்பிகை} பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரசமுனியாக இருந்து, பெரும் கல்வியும், புத்திக்கூர்மையும், சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் {அம்பிகையின்} தவறால் அவன் குருடாகப் பிறப்பான்" என்று வியாசர் பதிலுரைத்தார்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவனால் எவ்வாறு குருக்களுக்குத் தகுந்த ஏகாதிபதியாக முடியும்?
குருடாக இருப்பவனால் எவ்வாறு தனது உறவினர்களையும், குடும்பத்தையும், தன் தந்தையுடைய குலத்தின் மகிமையையும் பாதுகாக்க முடியும்? நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்" என்றாள்.
வியாசர் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சென்று விட்டார்.
மூத்த கோசல இளவரசி சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள்.
விரைவில் சத்தியவதி, தனது மற்றுமொரு மருமகளிடம் {அம்பாலிகையிடம்} உறுதி பெற்று முன்பு போலவே வியாசரை வரவழைத்தாள்.
வியாசர் முன்பு போலவே தனது உறுதிக்கிணங்கத் தனது தம்பியின் இரண்டாவது மனைவியை அணுகினார். அம்பாலிகை அந்த முனிவரைக் கண்ட பயத்தால் ஒளியிழந்து வெளிறிவிட்டாள்.
அம்பாலிகை பயத்தால் வெளிறிப்போவதைக் கண்ட வியாசர் அவளிடம்,"எனது கொடும் உருவத்தைக் கண்டு நீ பயத்தால் வெளிறிப் போனதால், ஒளியிளந்து வெளிறிய நிறத்தில் மகனைப் பெறுவாய். ஓ அழகான முகம் கொண்டவளே, உனது மகனின் பெயரும் பாண்டு (மங்கலானவன்) என்று வழங்கப்படும்" என்றார்.
இதைச்சொல்லிவிட்டு அந்தச் சிறப்புமிகுந்த முனிவர் அந்த அறையில் இருந்து வெளியே வந்தார்.
வியாசர் வெளியே வந்தபோது, அவரது தாய் சத்தியவதி அவரைச் சந்தித்துக் குழந்தையைப் பற்றிக் கேட்டாள்.அதற்கு அந்த முனிவர் குழந்தை மங்கிய நிறத்தில் பிறந்து பாண்டு என்ற பெயரால் அழைக்கப்படும் என்றார்.
சத்தியவதி அந்த முனிவரிடம் இன்னுமொரு குழந்தையை இரந்து கேட்டாள்.
அந்த முனிவர், "அப்படியே ஆகட்டும்" என்றார். அம்பாலிகை, அவளுக்குரிய காலத்தில் மங்கிய நிறத்தில் ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.
அந்தப் பிள்ளை மிகவும் அழகானவனாக அனைத்து அதிர்ஷ்டக்குறிகளும் பெற்றிருந்தான்.
அந்தப் பிள்ளையே பின்னாட்களில் பெரும் வில்லாளிகளான பாண்டவர்கள் ஐவரின் தந்தையானான்
சிறிது காலத்திற்குப் பிறகு, விசித்திரவீரியனின் மூத்த விதவை {அம்பிகை} தனது மாதவிடாய்க்குப் பிறகு, சத்தியவதியால் வியாசரை அணுகப் பணிக்கப் பட்டாள். தேவலோகத்தைச் சேர்ந்த மங்கை போன்றவளான அழகான அந்த இளவரசி அந்த முனிவரின் {வியாசரின்} கொடும் உருவத்தையும், கடும் நாற்றத்தையும் நினைத்துத் தனது மாமியாரின் உத்தரவை ஏற்க மறுத்தாள். இருப்பினும், அப்சரஸ் போன்ற அழகுடைய தனது தாதிகளில் ஒருத்திக்குத் தனது ஆடை மற்றும் ஆபரணங்களைப் பூட்டி அவரிடம் {வியாசரிடம்} அனுப்பி வைத்தாள். வியாசர் வந்ததும் அந்த மங்கை எழுந்திருந்து அவரை {வியாசரை} வணங்கினாள்.
அவள் வியாசரை மரியாதையுடன் கவனித்துக் கொண்டு, அவர் கேட்டுக்கொண்ட போது அவரருகே அமர்ந்தாள். கடுந்தவம் இருந்தவரான அம்முனிவர் அவளிடம் பெரும் மனநிறைவு கொண்டு,
அவளிடம் இருந்து விடைபெறும் முன், "இனிமையானவளே, இனி நீ அடிமையாக இருக்க மாட்டாய். உனது குழந்தை மிகவும் அதிர்ஷ்டசாலி, அவன் அறம் சார்ந்தவனாக இருந்து, இந்தப் பூமியில் புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனாக இருப்பான்" என்றார்.
கிருஷ்ண துவைபாயனருக்கு {வியாசருக்கு} அவளிடம் பிறந்த மகன் பின்னாட்களில் விதுரன் என்று அழைக்கப்பட்டான். இப்படியே அவன் {விதுரன்} திருதராஷ்டிரனுக்கும், சிறப்புமிகுந்த பாண்டுவுக்கும் சகோதரனானான்.
விதுரன் ஆசை மற்றும் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருந்து ஓர் அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் விதிகளைப் பயின்று அதில் நிபுணனானான். அவனே ஆணிமாண்டவ்யரின் சாபத்தால் பூமியில் பிறந்த தர்மதேவன் {யமன்} ஆவான்.
கிருஷ்ண துவைபாயனர் முன்பைப் போலவே தனது தாயைச் {சத்தியவதியைச்} சந்தித்து மூத்த இளவரசியால் தாம் ஏமாற்றப்பட்டதையும், சூத்திரப் பெண்ணுக்கு மகனைக் கொடுத்ததையும் சொன்னார். அனைத்தையும் சொல்லிவிட்டுத் தனது தாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனார்.
இப்படியே விசித்திரவீரியனுக்கு உரிமையுள்ள நிலத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடத்தில்} துவைபாயனருக்கு {வியாசருக்கு}, தேவர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான குழந்தைகள் குரு பரம்பரையின் தழைக்கச் செய்வதற்காகப் பிறந்தனர்" என்றார் வைசம்பாயன